புதன், 31 ஜூலை, 2013

காதல்


1.
மண்ணில் விழுந்து பயிர் வளர்ப்பது மழை.
கண்ணில் விழுந்து உயிர் வளர்ப்பது காதல்.

2.
காதல் காதல் தரும். காதல் அல்லார்க்கு
காதல் எங்கே வரும்?

3.
காதல் வேண்டின் காதல் வேண்டின் இளையோர்கான்
போதல் வேண்டும் போதல் வேண்டும் நன்னெறிக்கு.

4.
காதலாகிக் கசிந்து கண்ணீர் உருகி
உற்றகாதலால் என்ன பயன்?
மற்ற மாதர்முன் மண்டியிடும் போது.

5.
கொல்லுமாம் மாண்புடைக் காதல் மேதினிலே
சொல்லென நயம் உறைவிடத்து.
  

                த. சிவப்பிரகாசம்.  14.04.2011

செவ்வாய், 30 ஜூலை, 2013

கண்கள்

தாயும் மொழியும் கண்கள்.
தாயகம் காப்பவர் கண்கள்.
சேயும் செந்தமிழும் கண்கள்.
சொந்தங்கள் யாவரும் கண்கள்.

கம்பன் கழகம் கண்கள்.
காலை ஏடுகள் கண்கள்.
எம்மகளிர் பண்புகள் கண்கள்.
மாண்புடை இளையோர்கள் கண்கள்.

இரவுக்கு ஆயிரம் கண்கள்.
உறவுக்கு இரவே கண்கள்.
இதயத்தின் வாசல் கண்கள்.
எண்ணத்தின் வார்த்தைகள் கண்கள்.

கடவுளைக் கடைந்தன கண்கள்.
கடவுளைக் கண்டதா கண்கள்?
இமயத்தையும் எட்டும் கண்கள்.
ஆனால் இல்லையே….
காதலுக்கு மட்டும் கண்கள்.

    த. சிவப்பரகாசம்.   19.04.2011

திங்கள், 29 ஜூலை, 2013

இதயம்

திருமாலின் இதயத்தில் திருமகள்!
அனுமாரின் இதயத்தில் திருவும் மாலும!;
இன்னல்செய் இராவணன் இதயத்தில் இருந்ததால்
அரக்கர் குலம் முலநாசம் ஆனதே!

பாங்குற பகுத்தறிவு ஒளியுட்டி
எங்களினம் ஏற்றமுற வழிகாட்டி
வங்கக்கடல் தாலாட்ட உறங்குவதும்
எதையும் தாங்கும் இதயம்!

இனிய கம்பன் இதயம் கவிதையில்!
புனித அன்னை இதயம் அமைதியில்!
கர்மவீரர் காமராசர் இதயம் கல்வியில்!
கவியரசர் கண்ணதாசன் இதயம் கண்ணனிடமே!

கையளவு இதயத்தில் கடல்அலையாய் வந்தார!;
மைஎழுதிய விழியாலே மயக்கத்தைத் தந்தார்!
இதழாலே இதயத்தை இதமாக இழைத்தார்! – கண்
இமைக்க மறந்தாலும் மறக்காது என் இதயம்!


                     சிவப்பிரகாசம்  02.05.2011